श्रीमते वेदान्तरामानुजमहादेशिकाय नमः वेदेभ्यो नमः वेदप्रतिपाद्याय श्रीमते नारायणाय नमः ॥ श्रौतम् 1 - அவதாரிகை.
வேதமானது உலகத்தில் இருக்கும் ஜநங்கள் ஆசைப்படும் பிரயோஜனங்களை அடைவதற்கு வேண்டிய வழிகளைச் சொல்லுகிறது. பிரயோஜநங்கள் அவரவர்கள் குணங்களுக்குத் தகுந்தபடி வெவ்வேறாக இருக்கின்றன. (1) சில பிரயோஜனங்கள் - பிள்ளை பெண்டாட்டி, சாப்பாடு, வீடு, நிலம், மாடு, நல்ல பெயர், ஜனங்களை அடக்கி ஆளுவது. இவைகள் போல் இந்த உலகத்திலேயே இருந்து இந்த உடம்போடு அனுபவிக்கக்கூடியவைகள். அவைகளை ऐहिकம் (இங்கேயே உண்டாவது) என்று சொல்லுகிறது. அவைகளால் வரும் ஸுகம் கொஞ்சமாயும், நிலையில்லாததாயும், துக்கத்துடன் கலந்ததாயும் இருக்கிறது.
(2) வேறுசில பிரயோஜநங்கள் - சுவர்க்கம் முதலானவைகள்போல வேறு உலகங்களில் வேறு உடம்புகளோடு அனுபவிக்கத் தகுந்தவைகள். அவைகளை आमुष्मिकம் (அங்கே உண்டாவது) என்று சொல்லுகிறது, அவைகளால் வரும் ஸுகமானது ऐहिकங்களால் வருவதைக் காட்டிலும் உயர்ந்தது; நீடித்து இருப்பது; துக்கத்தின் கலப்பில்லாதது. ஆனால் அதற்கும் முடிவுண்டு. அதை அநுபவிக்கும்போதும் இது முடிந்துவிடுமே என்று பயம் உண்டு.
(3) வைகுண்டம் என்றும் பரமபதம் என்றும் சொல்லும் இடத்துக்குப் போனால், எல்லாவற்றைக்காட்டிலும் உயர்ந்த - ஒருநாளும் அழிவில்லாத அளவில்லாத - ஸுகம் உண்டாகும். இதை निश्रेयसம் என்று சொல்லுகிறது. ऐहिकமான பிரயோஜநங்களையும் आमुष्मिकமான பிரயோஜநங்களையும் கொடுக்கும் கர்மங்களை வேதத்தின் முன்பாகம் சொல்லுகிறது. निःश्रेयसமென்கிற பிரயோஜநத்தைக் கொடுப்பது மஹாலக்ஷிமியோடு கூடின நாராயனனைத் த்யானம் செய்வது, அதை உபநிஷத்துக்கள் என்று சொல்லப்படுகிற வேதத்தின் பின்பாகம் சொல்லுகிறது. இந்தப்புஸ்தகத்தின் முன்பாகத்தில் சொல்லப்பட்ட கர்மங்களும், அவைகளைச் செய்யும் விதமும் சொல்லப்படுகின்றன.
2.0 2. யாகம் - இந்தக்கர்மங்களாவன - பலவிதமான யாகங்களும், அவைகளுக்கு உதவியான வேலைகளும். யாகம் என்றால் - ஒரு தேவதைக்கு ஸந்தோஷத்தை உண்டு பண்ண ஒரு திரவியத்தை அதற்குக் கொடுப்பது. ஒரு யாகத்தை இன்னதென்று அறியவேண்டுமானால், சந்தோஷப்படுத்தப்படும் தேவதையையும், அததற்குக் கொடுக்கவேண்டிய திரவியத்தையும் அறியவேண்டும். தேவதையையும், திரவியத்தையும் யாகத்தின் ரூபமென்று சொல்லுகிறது.
3.0 3. தேவதை என்பது முன் செய்த புண்ணியத்தால் சில அதிகாரம் பெற்ற ஜீவன். யாகங்களைச் செய்து தேவதைகளை ஸந்தோஷப்படுத்தினால், யாகம் செய்கிறவர்களுக்கு வேண்டிய பலன்களை அவர்கள் கொடுக்கிறார்கள். தேவதைகள் - அக்கினி, இந்திரன், ஸோமன், வாயு, மித்திரன், வருணன், பிரஜாபதி விஷ்ணு முதலானவர்கள். சில யாகங்களுக்கு இரண்டு பேர்கள் சேர்ந்து தேவதையாக ஆகிறார்கள். அக்கினியும் ஸோமனும் சேர்ந்து अग्नीषोमौ; இந்திரனும் அக்கினியும் சேர்ந்து इन्द्राग्नी. இதை உலகத்திலும் பார்க்கலாம். சென்னை ராஜதானியில் கெவர்ன்மெண்டு என்பது கவர்னரும் அவருடன் சேர்ந்து வேலை செய்யும் மந்திரிகளும் சேர்ந்தது தான். அப்படியே இங்கேயும். மேலும், ஒரே தேவதையைச் சொல்லும் பெயர்கள் வெவ்வேறாக இருந்தாலும், ஒருபெயருடன் சேர்ந்த சொற்கள் (विशेषणம்) வேறாக இருந்தாலும், தேவதை வேறாக ஆகிறது. ஸூரியனுக்கு வடமொழியில் सूर्यன் என்றும், ஸவிதாவென்றும், पूषன் என்றும் பெயர்கள் सूर्यன், सविता, पूषன், வெவ்வேறு தேவதைகள். இந்திரன் ஒருவனாய் இருந்தாலும், महेந்திரன் (பெரியனான இந்திரன்) வேறு தேவதை. இதையும் உலகத்தில் பார்க்கலாம். கோயம்புத்தூர் ஜில்லாவில் கொள்ளேகால் தாலுகாவில் ஒரே அதிகாரி தாசில்தார் என்ற பெயருடன் வாய்தாப்பணத்தை வசூல் செய்கிறான்; மாஜிஸ்திரேட்டு என்ற பெயருடன் குற்றங்களை விசாரிக்கிறான்; முன்சீப் என்கிற பெயருடன் சிவில் கேசுகளை விசாரிக்கிறான். ஒருவன் வாயிதா விஷயத்தில் அவனுக்கு மனு செய்துகொள்ள வேண்டுமானால், தாசில்தார் என்று மனுவில் எழுத வேணும். இப்படியே மற்ற விஷயங்களிலும். அது போல.
4.0 4. திரவியம் - தேவதைகளுக்குக் கொடுக்கப்படும் திரவியங்கள் பலவிதம்-
*4.1 (1) சிலயாகங்களுக்கு திரவியம் நெல் (व्रीहि), யவம் முதலான தானியங்கள். நெல்லைக் குத்தி அரிசியாகப் பண்ணி, அரிசியை அறைத்து மாவாகப் பண்ணி, மாவை வறுத்து, ஜலத்தை விட்டு உண்டையாகப் பண்ணி அதைச் சுடவேணும். அப்போது அதற்கு पुरोडाशம் (புரோடாசம்) என்று பெயர். சில யாகங்களில் அரிசியை மாவாகப் பண்ணாமலே पाकம் (சமையல்) செய்ய வேண்டியது. அதற்கு चरु என்று பெயர்.
*4.2 (2) சில யாகங்களுக்கு திரவியம் பசுமாட்டின் பாலும், தயிரும், நெய்யும். பாலுக்கும் தயிருக்கும் சேர்ந்து श्रौतத்தில் सान्नाय्यம் (ஸாந்நாய்யம்) என்று பெயர். நெய்யில் தயிரைச் சேர்த்து ஹவிஸாகப் பண்ணுவதுமுண்டு. அதற்கு पृषदाज्यம் (பிரஷதாஜ்ஜியம்) என்று பெயர். பாலை நன்றாய்க் காய்ச்சி சூடாயிருக்கும் போதே அதில் தயிரைச் சேர்த்தால், அது திரிந்து சக்கையும் தண்ணீருமாகிறது. சக்கைக்கு आमिक्षा (ஆமிக்ஷா) என்றும், தண்ணீருக்கு वाजिनम् (வாஜிநம்) என்றும் பெயர். ஆமிக்ஷா சில யாகங்களுக்குத் திரவியம்.
*4.3 (3) வேறு சில யாகங்களுக்குத் திரவியம் பசு - அதாவது நாலு காலுள்ள பிராணி. பெரும்பாலும் அது छागः (ஆண் வெள்ளாடு). अतिरात्रம் என்கிற ஸோமயாகத்தில் பசு मेषी (பெண் செம்மறியாடு). ஸோமயாகங்களுக்கு உதவிசெய்கிற अनूबन्ध्या யாகத்துக்கு वशा வஶா (மலட்டுப்பசுமாடு). கலியுகத்தில் இந்த திரவியம் கூடாதென்று சாஸ்திரம் இருக்கிறபடியால், ருஷிகள் அந்தப்பசுவுக்குப் பதிலாக ஆமிக்ஷாவைத் திரவியமாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ராஜாக்கள் செய்யும் அசுவமேதம் என்கிற யாகத்துக்குப் பசு (अश्वः) குதிரை. இந்தப் பசுயாகங்களில் பசுவின் சில பாகங்களைத் தான் ஹவிஸ்ஸாக எடுத்துக்கொள்ள வேண்டியது. பசுவின் வயிற்றில் வாழைக் குருத்துப் போல் ஒன்று இருக்கிறது அதற்கு वपा (வபை) என்று பெயர். அதில் நெய்யை விட்டு அக்கினியில் பாகம் செய்து ஹோமம் செய்ய வேண்டியது. இதற்கு வபாயாகம் என்று பெயர். பிறகு பசுவின் உடம்பிலிருந்து ஹிருதயம், நாக்கு, மார்பு முதலான பதினொரு பாகங்களை எடுத்து ஜலத்தில் போட்டு பாகம் செய்து அவைகளை ஹோமம் செய்யவேண்டியது. இதுக்கு अङ्गयागம் (அங்கயாகம்) என்று பெயர். இந்த இரண்டு யாகங்களும் ஒரே யாகத்தின் பாகங்கள்.
*4.4 (4) ஸோமயாகங்களில் திரவியம் ஸோமம் என்னும் கொடி. அதை ஜலத்தை விட்டு நசுக்கி, ரஸத்தை எடுத்து ஹோமம் செய்ய வேண்டியது.
*5.0 5. ஒரு யாகத்தைச் செய்கையில் பல வியாபாரங்கள் இருக்கின்றன. முதலில் बर्हिஸ் (தர்ப்பம்), इध्मம் (புரசமரத்தின் குச்சிகள்), पलाशशाखै (புரசமரத்தின் கிளை) இவைகளைக் கொண்டு வர வேண்டியது. பிறகு ஹோமத்துக்கு ஏற்பட்ட திரவியங்களை ஹவிஸ்ஸாகப் பண்ணுவது - அதாவது தேவதைக்குக் கொடுக்கத் தகுந்ததாய்ப் பண்ணுவது. இதன் பிறகு யாகங்களைச் செய்வது. யாகத்தைச் செய்கிறவன் எந்த பிரயோஜநத்தை ஆசைப்படுகிறானோ, அந்தப் பிரயோஜநத்தைக் கொடுப்பது प्रधान (முக்கியமான) யாகம். அதற்கு சில யாகங்கள் உதவி செய்கின்றன. அவைகளை अङ्गयागங்கள் என்று சொல்லுகிறது. கடைசியில் யாகம் செய்து மிகுந்த ஹவிஸ்ஸையும், யாகத்துக்காகச் சேர்க்கப்பட்ட பதார்த்தங்களையும் செலவழிப்பது இதை प्रतिपत्ति (பிரதிபத்தி) கர்மம் என்று சொல்லுகிறது. யாகம் செய்கிற இடத்தில் இவைகள் இருந்து இடைஞ்சல் படாதபடி அவைகளை உடனுக்கு உடனே செலவழிக்க வேண்டியது.
*6.0 6. ஒரு பெண்ணைக் கலியாணம் செய்துகொண்டு வீட்டிலிருக்கும் (गृहस्थன்) பிராமணன் आधानம் (ஆதானம்) என்னும் கர்மத்தைச் செய்து, மூன்று அக்கினிகளை உண்டு பண்ணி, உயிரோடு இருக்கும் வரையில் ஒவ்வொரு நாளும் காலையில் இரண்டு ஹோமங்களையும், ஸாயங்காலத்தில் இரண்டு ஹோமங்களையும் செய்ய வேண்டியது. அவைகளுக்கு अग्निहोत्रம் (அக்கினிஹோத்திரம்) என்று பெயர். ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசியையில் தர்ஶம் என்னும் இஷ்டியையும், பௌர்ணமியில் பூர்ணமாஸம் என்கிற இஷ்டியையும் ஆரம்பித்து, அடுத்து பிரதமையில் முடிக்க வேண்டியது. தர்ஶம் என்பது மூன்று யாகங்களுக்கும், பூர்ணமாஸம் என்பது மூன்று யாகங்களுக்கும் பெயர். இவைகளை இஷ்டிகள் என்றும் சொல்லுகிறது. வஸந்த ருதுவில், அதாவது சித்திரை-வைகாசி மாதங்களில், अग्निष्टोमம் (அக்கினிஷ்டோமம்) என்கிற ஸோம யாகத்தைச் செய்யவேண்டியது. இவைகளை (அக்கினிஹோத்திரம், தர்ஶபூர்ணமாஸ இஷ்டிகள், அக்கினிஷ்டோமம்) நித்தியகர்மங்களென்று சொல்லுகிறது. இவைகளைச் செய்யாமல் போனால், இவைகள் ஏற்பாடு செய்த தைவத்துக்குக் கோபமுண்டாகும். வேதத்தில் இவைகளைச் செய்யும் விதமானது, ஒரு வியாபாரத்தையும் விடாமல், சொல்லியிருக்கிறது. இப்படிச்சொல்லப்பட்டு இருக்கும் யாகங்கள் प्रकृति (பிரகிருதி) என்று சொல்லுகிறது. வெவ்வேறு பலன்களுக்காகச் செய்யப்படும் யாகங்களை काम्य (காம்மிய)ங்கள் என்று சொல்லுகிறது. அவைகளைப்பற்றி இன்ன தேவதைக்கு இன்ன திரவியத்தைக் கொடுக்கவேண்டியதென்று யாகத்தை விதித்து, அதற்கு வேண்டிய இரண்டு மந்திரங்கள் மட்டும் வேதம் சொல்லுகிறது. அதற்கு வேண்டிய எல்லா வியாபாரங்களையும் பிரகிருதி யாகங்களைப் பார்த்து அவைகளில் போல் செய்ய வேண்டியது. இவைகளுக்கு विकृति (விகிருதி) யாகங்கள் என்று பெயர். அக்கினிஹோத்திரமும், தர்ஶ பூர்ணமாஸ இஷ்டிகளும், அக்கினிஷ்டோமமும் பிரகிருதி. அவைகள் மேலே விரிவாய் எழுதப்படும்.
*7.0 7. யாகம் செய்கிறவனுக்கு यजमानன் என்று பெயர். அவன் ஒருவனால் இந்த யாகங்களைச் செய்யமுடியாது. ஆகையால் வேதத்தைப் படித்து, யாகங்களைச் செய்யும் விதத்தை அறிந்த பிராம்மணர்களைத் தனக்கு ஒத்தாசை செய்ய வைத்துக் கொள்ளுகிறான். அவர்களுக்கு ऋत्विक् (ருத்துவிக்கு) என்று பெயர். அக்கினிஹோத்திரத்தை யஜமாநனே செய்யலாம். தனக்குப்பதிலாக ஒரு ருத்விக்கை வைத்துக் கொள்ளலாம். இஷ்டிகளுக்கு நாலு ருத்விக்குகள் வேண்டும். அவர்களாவன - अध्वर्यु (அத்வர்யு) ஹோதா, ब्रह्मा (பிரும்மா), आग्नीध्रன் (ஆக்கினீத்திரன்). இவர்களில் அத்வர்யு பர்ஹிஸு முதலான பதார்த்தங்களைக் கொண்டு வந்து, திரவியங்களை ஹவிஸ்ஸாகப் பண்ணி, யாகங்களைச்செய்து, பிரதிபத்திகர்மத்தையும் செய்கிறான். யாகங்களைச் செய்யும் போது ஹோதா மந்திரங்களைச் சொல்லுகிறான். பிரம்மா எல்லா வியாபாரங்களும் ஸரியாய் நடக்கின்றனவா என்று பார்த்துக் கொண்டிருக்கிறான். சில வியாபாரங்களுக்கு உத்திரவு கொடுக்கிறான். ஆக்கினீத்திரன் அத்வர்யுவுக்கு ஒத்தாசை செய்கிறான். பசு யாகங்களுக்கு இவர்களுடன் இன்னும் இரண்டு ருத்விக்குகள் வேண்டும். அவர்களாவன - प्रतिप्रस्थाता (பிரதிப்ரஸ்தாதா), मैत्रावरुणன் (மைத்திராவருணன்) என்று. அக்கினிஷ்டோமத்துக்கு இவர்களுள்பட பதினாறு ருத்விக்குகள் வேண்டும். அவர்கள் பெயர்களும், அவர்கள் செய்யும் வேலைகளும் மேலே எழுதப்படும்.